உலக அளவில் கொரோனா பரவலில் 4வது இடத்தை இந்தியா நெருங்கிக் கொண்டிருக்கிறது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவும் நிலையில், 4வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை விரைவில் இந்தியா முந்தும்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. உலகம் முழுவதும் 73 லட்சத்து 26,311 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 4 லட்சத்து 13,765 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக, அமெரிக்காவில் 20 லட்சத்து 45,715 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. ஒரு லட்சத்து 14,151 பேர் பலியாகியுள்ளனர். 2வது இடத்தில் பிரேசிலில் 7 லட்சத்து 42,084 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இங்கு 38,497 பலியாகியுள்ளனர். ரஷ்யாவில் 4 லட்சத்து 85,253 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 6142 பேர் பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் 2 லட்சத்து 89,140 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 40,883 பேர் உயிரிழந்துள்ளனர். 5வது இடத்தில் உள்ள ஸ்பெயினில் 2 லட்சத்து 89,046 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், 27,136 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது 6வது இடத்தில் உள்ள இந்தியாவில் 2 லட்சத்து 76,583 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனா பலி எண்ணிக்கை 7745 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், இங்கிலாந்திலும், ஸ்பெயினிலும் கொரோனா பரவல் ஓரளவுக்குக் கட்டுப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் தினமும் ஆயிரம் பேருக்குத்தான் கொரோனா பரவுகிறது. ஆனால், இந்தியாவில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 9985 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரிந்தது. இந்த நிலை இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, இரண்டு, மூன்று நாட்களில் கொரோனா பரவலில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தை எட்டி விடும்.