அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்குவது தொடர்பாகப் பிரதமர் மோடியைச் சந்திக்க டிரஸ்ட் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும், பாபர் மசூதிக்கு வேறொரு இடம் ஒதுக்கவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதன்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மகந்த் என்.ஜி.தாஸ் உள்ளார். இவரது செய்தி தொடர்பாளரான மகந்த் கே.என்.தாஸ் இன்று அயோத்தி ராமஜென்ம பூமிக்கு வந்தார்.
ராமர் கோயில் கட்டும் வளாகத்தில் ஆரம்பக் கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இங்கு இன்று ருத்ராபிஷேகம் நடைபெற்றது. இதற்கு வந்திருந்த மகந்த் கே.என். தாஸ் கூறுகையில், ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் விழா ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாகப் பிரதமர் மோடி எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. இல்லாவிட்டால் அவர் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்றிருப்பார். நாங்கள் விரைவில் பிரதமர் மோடியைச் சந்தித்து அடிக்கல் மற்றும் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளோம் என்றார்.