மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் தினமும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 9996 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை 2 லட்சத்து 86,579 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்நோய்க்கு 8102 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிராவில்தான் அதிகமாக கொரோனா பரவியிருக்கிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 3254 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இது வரை அம்மாநிலத்தில் 94,044 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதில், 44,517 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று பலியான 149 பேரையும் சேர்த்து, மொத்தம் 3438 பேர் பலியாகியுள்ளனர்.மும்பையில் மட்டுமே 52,667 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சீனாவில் கொரோனா தோன்றிய உகான் மாநகரிலேயே 50,333 பேருக்குத்தான் கொரோனா பரவியிருக்கிறது. ஆனால், உகானையும் மும்பை முந்தி விட்டது. மும்பையில் மட்டுமே 1857 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதே சமயம், உகானில் 3869 பேர் உயிரிழந்துள்ளனர்.