இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்து 43,091 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும், கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை.
இந்தியாவில் தற்போது தினமும் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 10,667 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 3 லட்சத்து 43,091 பேராக அதிகரித்துள்ளது.அதே போல், நேற்று மட்டுமே கொரோனா நோயாளிகள் 380 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 9900 ஆக அதிகரித்துள்ளது.நாளையே இது 10 ஆயிரத்தைத் தாண்டும் எனத் தெரிகிறது.
நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்தான் ஒரு லட்சத்து 10,744 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. அம்மாநிலத்தில் மட்டுமே 4128 பேர் பலியாகியுள்ளனர். அடுத்து தமிழகத்தில் 46,504 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், 479 பேர் பலியாகியுள்ளனர். 3வது இடத்தில் டெல்லி உள்ளது.