இந்தியாவில் இது வரை 59 லட்சம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது தினமும் 3 லட்சம் பரிசோதனைகள் செய்யும் நிலையை எட்டியுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. சீன வைரஸ் நோய் கொரோனா, உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில்தான், கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. தினமும் சுமார் 10 ஆயிரம் பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது 3.5 லட்சம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 12 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தினால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகும். அதேசமயம், நோய் பரவலை வேகமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்(ஐ.சி.எம்.ஆர்) வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் இது வரை 59,21,069 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று(ஜூன்16) மட்டும் ஒரு லட்சத்து 54,935 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது இதையும் அதிகப்படுத்தி, தினமும் 3 லட்சம் பரிசோதனை செய்யும் நிலையை எட்டியுள்ளோம்.
நாட்டில் மொத்தம் 907 லேப்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் 659 அரசு லேப் மற்றும் 248 தனியார் லேப்கள் அடங்கும். மொத்தம் உள்ள 907 லேப்களில் 534 லேப்களில் ஆர்டி-பிசிஆர் டெஸ்ட் செய்யப்படுகிறது.நோய் பரவல் அதிகமாக உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், துரிதப் பரிசோதனையாக ஸ்டாண்டர்டு கியூ கோவிட்19 ஏ.ஜி சோதனைகள் மேற்கொள்ள அனுமதித்துள்ளோம். இந்த சோதனை மூலம் 15 நிமிடங்களில் நோய் அறிகுறிகளை அறியலாம் என்று தெரிவித்துள்ளது.