லடாக்கில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்ததற்கு என்ன காரணம்? என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் சோனியா காந்தி கேள்வி எழுப்பினார்.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவப் படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் வரை காயம் மற்றும் பலியானதாகத் தகவல் வெளியானது.
சீனப் படைகள் தொடர்ந்து இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் ஊடுருவியிருப்பதாகவும், அவை விரட்டப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே, ஒரு கர்னல் உள்பட 10 இந்திய வீரர்களைச் சீனா பிடித்து வைத்திருந்ததாகவும், அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.லடாக் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இது பற்றி விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டத்தைப் பிரதமர் மோடி நேற்று (ஜூன்19) மாலை 5 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியாவின் எல்லைக்குள் சீனப் படைகள் எப்போது ஊருவி நுழைந்தன? மே 5ம் தேதியே அவர்கள் ஊடுருவி விட்டதாக முதலில் செய்திகள் வந்ததே அது சரியா? இந்திய எல்லைக்குள் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்களா? அந்தப் படைகள் விரட்டப்பட வேண்டும். நமது ராணுவ வீரர்கள் 20 பேர் மரணம் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? நமது உளவுத் துறை முன்கூட்டியே தகவல் அறியத் தவறி விட்டதா?
இந்திய மக்கள் அனைவரும் இந்த விஷயத்தில் அரசுக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். சீனப் பிரச்சனையை அரசு சாதாரணமாக எடுத்து கொள்ளக் கூடாது. மேலும், மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதத்தில் உண்மை நிலவரங்களை மக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.