லடாக் எல்லையில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே இணைச் செயலாளர்கள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சீனா திடீரென படைகளைக் குவித்து இந்தியாவுடன் மோதியது. கிழக்கு லடாக் பங்காங் ஏரி அருகே இந்தியாவின் சாலை அமைக்கும் பணியைத் தடுக்கும் வகையில் சீன படைகள் மோதலை ஆரம்பித்தன. இதையடுத்து, கடந்த 6ம் தேதி இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கர்னல் சந்தோஷ்பாபு, தமிழக வீரர் பழனி உள்பட 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
இதன்பின், இரு நாட்டு ராணுவமும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே, இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமுக உடன்பாடு எட்டப்படாவிட்டாலும், எல்லையில் மோதலை தவிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இன்று(ஜூன்24) இருநாடுகளுக்கு இடையே இணைச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், இருநாட்டு எல்லைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, ராணுவ அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது.