சட்டீஸ்கர் அரசு, கால்நடை வளர்ப்போரிடம் இருந்து மாட்டுச் சாணத்தை விலைக்கு வாங்கும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் கால்நடைகள் வளர்ப்பது முக்கியமான தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்போர் தங்கள் மாடுகளைச் சாலைகளில் சுற்றித் திரிய விடுவதால், போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன. மேலும், சுற்றுச்சூழலும் கெடுகிறது.
இதைத் தடுப்பதற்காக முதல்வர் பூபேஷ் பாகெல் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். கோதான் நியாய் யோஜனா என்ற இந்த திட்டத்தின்படி, கால்நடை வளர்ப்போரிடம் மாட்டுச் சாணத்தை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யவிருக்கிறது. அப்படி கொள்முதல் செய்யப்படும் மாட்டுச் சாணத்தில் இருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கப்படும். அவை கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விவசாயிகளுக்குக் குறைந்த விலைக்கு விற்கப்படும்.
இதனால், மாடுகளைச் சாலைகளில் சுற்றித் திரிய விடாமல், அவற்றை வளர்ப்போர் பத்திரமாகப் பார்த்துக் கொள்வார்கள். இதன்மூலம், கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்போருக்குப் பொருளாதார உதவி கிடைக்கும். கிராமப்புற பொருளாதாரம் உயரும். மேலும், சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப்படும். இத்திட்டத்தை வேளாண்மைத் துறை, கால்நடை வளர்ப்பு துறை, கூட்டுறவுத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.