ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் மாநில தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட்டை காங்கிரஸ் நீக்கியுள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் உள்ளார். வயது முதிர்ந்த அசோக் கெலாட்டை ஒதுக்கி விட்டு தன்னை முதல்வராக்க வேண்டுமென்று சச்சின் பைலட் தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
இந்நிலையில், பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்குச் சென்றனர். அங்கு நேற்று கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் சச்சின் பைலட் மற்றும் அவருக்கு ஆதரவான 16 எம்.எல்.ஏ.க்கள் தவிர மற்றவர்கள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. அதே சமயம், 104 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றதாக கெலாட் தரப்பில் கூறப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள பேர்மவுன்ட் என்ற நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு இன்று(ஜூலை14) காலையில் மீண்டும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதிலும் சச்சின் பைலட் உள்பட 17 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாகக் கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர்.இந்த சூழலில், பைலட்டுடன் குறைந்தது 20 எம்.எல்.ஏ.க்களாவது வராவிட்டால், கெலாட் ஆட்சியைக் கவிழ்ப்பது சிரமம் என்று பாஜக உணர்ந்தது. இதனால், அடுத்து என்ன செய்வது என்று திணறி வருகிறது.இதற்கிடையே, ஜெய்ப்பூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா கூறியதாவது:
துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை நீக்குவதற்குக் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. மேலும், அவருடன் சென்ற அமைச்சர்கள் விஸ்வேந்தர்சிங், ரமேஷ் மீனா ஆகியோரும் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நீக்கத்தைத் தெரிவித்தார். மேலும், தனக்குச் சட்டசபையில் போதிய பலம் உள்ளதாகத் தெரிவித்தார்.