பாஜகவில் சேர மாட்டேன்.. பல்டியடித்த சச்சின் பைலட்..

Im not joining BJP says Sachin Pilot.

by எஸ். எம். கணபதி, Jul 15, 2020, 12:43 PM IST

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், பாஜகவில் சேரும் திட்டமே இல்லை என்று பல்டியடித்துள்ளார்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்தார். அசோக் கெலாட்டை ஒதுக்கி விட்டு தன்னை முதல்வராக்க வேண்டுமென்று சச்சின் பைலட் தொடர்ந்து காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இந்நிலையில், பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. கடந்த மாதம் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியை பாஜக மேற்கொண்டது. ஆனால், அது பலனளிக்கவில்லை.

தற்போது சச்சின் பைலட்டை மீண்டும் பாஜக இழுக்க முயன்றது. பைலட்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேரை அழைத்துச் சென்று டெல்லியில் முகாமிட்டார். மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஜோதிராதித்ய சிந்தியா எப்படிச் செயல்பட்டாரோ அதே போன்று பைலட்டும் செயல்பட்டார்.
ஆனால், ம.பி.யில் சிந்தியாவுக்கு கை கொடுத்த நம்பர் கணக்கு பைலட்டுக்கு இல்லை. முதல்வர் கெலாட்டுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பது, கடந்த 2 நாட்களாக நடத்திய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தெரிய வந்தது. 200 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் தொடர்ந்து கெலாட்டுக்கு மெஜாரிட்டி உள்ளது. இதனால், பைலட்டுடன் சென்ற 4 எம்.எல்.ஏ.க்கள் பின்வாங்கினர்.

இந்நிலையில், டெல்லியில் சச்சின் பைலட் இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாக இருந்தது. சிந்தியாவைப் போல் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை வாபஸ் பெற வைத்து விட்டு, பாஜகவில் அவர் சேரப் போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடையவே பாஜகவும் பின்வாங்கியது. பைலட்டும் பின்வாங்கி விட்டார்.பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்த பைலட், நான் பாஜகவில் சேர மாட்டேன். காங்கிரஸ் தலைமையிடம் என்னை இழிவுபடுத்திக் காட்டுவதற்காகச் சிலர் சித்தரித்துள்ளனர். நான் இன்னமும் காங்கிரசில்தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை 2 முறை புறக்கணித்ததால், துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளில் இருந்து பைலட் நீக்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு 2 நாளில் விளக்கம் தருமாறு கூறி, கட்சி நோட்டீஸ் கொடுத்திருக்கிறது.

You'r reading பாஜகவில் சேர மாட்டேன்.. பல்டியடித்த சச்சின் பைலட்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை