இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. பலி எண்ணிக்கையும் 25ஆயிரத்தைக் கடந்தது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நோய் பரவலில் முதல் இடத்தில் அமெரிக்காவும், 2ம் இடத்தில் பிரேசிலும், 3வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் இது வரை பஸ், ரயில் போக்குவரத்து சேவைகள், சினிமா தியேட்டர்கள், மால்கள் உள்ளிட்டவை செயல்படவில்லை.
நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதிதாக 34,956 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து இது வரை பத்து லட்சத்து 3832 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. இவர்களில் 6 லட்சத்து 35,757 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3 லட்சத்து 42,473 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். இந்நோயால் நேற்று மட்டும் 687 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து 25,602 பேர் பலியாகியிருக்கின்றனர். நாடு முழுவதும் இது வரை ஒரு கோடியே 30 லட்சத்து 72,718 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 3 லட்சத்து 33,226 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் ஜனவரி 31ம் தேதி முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 109 நாட்களில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை மே19ல் ஒரு லட்சமானது. அடுத்த 15 நாளில் ஜுன்3ல் 2 லட்சமாகவும், அடுத்த 10 நாளில் ஜுன்13ல் 3 லட்சமாகவும், அடுத்த 8 நாளில் ஜூன் 21ல் 4 லட்சமாகவும், அடுத்த 6 நாளில் ஜூன் 27ல் 5 லட்சமாகவும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை உயர்ந்தது. இதைத் தொடர்ந்து 6 நாளில் ஜுலை 2ல் 6 லட்சமாகவும், 5 நாளில் ஜுலை 7ல் 7 லட்சமாகவும், அடுத்த 4 நாளில் ஜுலை 11ல் 8 லட்சமாகவும், அடுத்த 3 நாளில் ஜூலை 14ல் நோய்ப் பாதிப்பு 9 லட்சமாக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், இன்று(ஜூலை17) 10 லட்சமாக உயர்ந்திருக்கிறது.