கொரோனா மற்றும் தொடர் ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். பலர் தங்களின் அன்றாட வாழ்க்கையை ஓட்ட முடியாமல் திணறி வருகின்றனர். சிலர் தங்களால் முடிந்த வேலைகளைச் செய்து லாக்டவுன் காலத்தைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் அரசு அதிகாரிகளின் பேராசையால் சிறுவன் ஒருவனுக்கு நேர்ந்த சோகம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான இந்தூரில் நேற்று சாலையோரத்தில் தள்ளுவண்டிக் கடையில் முட்டைகள் விற்றுக்கொண்டிருந்துள்ளான் 14 வயது சிறுவன் ஒருவன். விற்பனை நேரத்தின்போது அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் ரூ.100 லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால் போதிய அளவு வியாபாரம் ஆகாததால் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாகத் தெரிகிறது. ஆனாலும் சிறுவனை விடாமல் அதிகாரிகள் தொந்தரவு செய்து பணம் கேட்டுள்ளனர். மேலும் 100 ரூபாய் கொடுக்கவில்லையெனில் நாளை இதே இடத்தில் கடை நடத்த முடியாது எனக் கூறி மிரட்டியுள்ளனர்.
பதிலுக்குப் பதில் சிறுவன், ``ஏற்கனவே லாக்டவுனால் வியாபாரம் குறைவாகத் தான் நடக்கிறது. இதிலும் வந்து லஞ்சம் கேட்டால் என்ன செய்வது" எனக் கேட்க டென்ஷனான அதிகாரிகள் சிறுவனின் தள்ளுவண்டியை எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளனர். இதில் தள்ளுவண்டியில் இருந்த முட்டைகள் அனைத்தும் நொறுங்கி உள்ளது. இந்த சம்பவங்களை அங்குள்ளவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட தற்போது சர்ச்சை ஆகியுள்ளது.