கார்கில் போரின் போது வாஜ்பாய் சொன்ன மந்திரம், இன்றைய சூழ்நிலையிலும் பொருந்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.கடந்த 1999ம் ஆண்டில் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவிய போது, இந்திய வீரர்கள் அதை முறியடித்து போரில் வெற்றி பெற்றனர். கார்கில் போர் வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று ரேடியோவில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாவது:கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் போரில் நமது ராணுவ வீரர்கள் துணிவுடனும், வீரத்துடனும் போர் புரிந்து வெற்றிக் கொடியை நாட்டினார்கள். அந்த வெற்றியை இப்போது நாம் கொண்டாடுகிறோம்.
அந்த போர் நடைபெற்ற போது நிலவிய சூழ்நிலையை நாடு என்றுமே மறக்காது. இந்தி மண்ணை அபகரிப்பதற்குப் பாகிஸ்தான் கனவு கண்டது. அது மட்டுமல்ல, அந்த நாட்டின் உட்பூசல்களில் இருந்து மக்களைத் திசை திருப்புவதற்காகவும் திட்டமிட்டு கார்கில் போரைத் தூண்டியது. ஆனால், அப்போது பாகிஸ்தானுடன் நல்லுறவை மேம்படுத்துவதற்கு வாஜ்பாய் தலைமையிலான இந்தியா, பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் முதுகில் குத்துவது போல், பாகிஸ்தான் செயல்பட்டது.ஆனால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் வீரத்தை வெளிப்படுத்தி, வெற்றியைப் பெற்றுத் தந்தனர். இந்த வெற்றியை உலகம் முழுவதும் கவனித்து வியந்தது.
கார்கில் போர் வெற்றி தினத்தை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடுகிறார்கள். சமூக ஊடகங்களில் கரேஜ் இன் கார்கில் (courageinkargil) என்ற ஹேஸ்டேக்கில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.கார்கில் போரின் போது, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், செங்கோட்டையில் ஆற்றிய உரையை மறக்க முடியாது. நமக்கு ஒரு சங்கடம் ஏற்படும் போது, நம்மை விட ஏழ்மையாக இருக்கும் மக்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வார்த்தைகளை வாஜ்பாய் சுட்டிக் காட்டியிருந்தார். வாஜ்பாய் இன்னொரு மந்திரத்தையும் சொல்லியிருந்தார். எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுக்கும் முன்பாக நமது முயற்சிகள், கடினமான மலைச்சிகரங்களில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து வரும் வீரர்களுக்குப் பெருமையைச் சேர்க்குமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். வாஜ்பாயின் மந்திரம் இன்றைய சூழ்நிலையிலும் பொருந்தக் கூடியவை.