இந்திய கிரிக்கெட்டின் `டார்க் பக்கங்கள்.. யுவராஜ் சிங் பகிர்ந்த கம்பீர், சேவாக்கின் `ஓய்வு வேதனை!

Yuvraj Singh shared Gambhir and Sehwags retirement pain!

by Sasitharan, Jul 27, 2020, 14:15 PM IST

இந்திய கிரிக்கெட்டின் மகத்தான வீரன் யுவி எனும் யுவராஜ் சிங். இந்திய அணிக்காக கடும் நோய் அவதிக்கு மத்தியிலும் 50 ஓவர் உலகக்கோப்பையை 110 கோடி மக்களின் கைகளில் தவழச் செய்தார். அதற்கு சில ஆண்டுகள் முன்புதான் உலகம் முதல்முறை பார்த்த டி20 உலகக்கோப்பையை இந்தியாவை உச்சி முகரச் செய்தார். இதன்பின் கேன்சர் நோயால் அவதிப்பட்டாலும் 2017ம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டுக்குக் கம்பேக் கொடுத்தார் யுவி. ஆனால் முன்புபோல் அவரது கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவு நன்றாக அமையவில்லை. நிறையப் போட்டிகளில் விளையாடி தனது திறமையை யுவி நிரூபித்தாலும், பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை என்றே கூற வேண்டும். விளைவு .. எல்லா வீரர்களுக்கும் ஏற்படும் அதே முடிவு. ஓய்வை அறிவித்தார் யுவி.

பல வெற்றிகளைக் குவித்த யுவராஜூக்கு பிசிசிஐ வழியனுப்பு விழா கூட நடத்தவில்லை. பிசிசிஐயின் செயல்பாடுகள் அப்போது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஓய்வின் போது நடந்தவற்றை யுவராஜ் சிங் தற்போது பேசியுள்ளார். ``நான் கிரிக்கெட்டில் ஒரு லெஜண்ட் கிடையாது என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால், நான் கிரிக்கெட்டை நேர்மையுடன் விளையாடியிருக்கிறேன், அவ்வளவே. காரணம் நான் அதிகம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை. லெஜண்ட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள்.

எனது ஓய்வின்போது பிசிசிஐ என்னை நடத்திய விதம் சரியானது அல்ல என்பதை உணர்வேன். எனக்கு வழியனுப்பு விழா நடத்துவதை பிசிசிஐ முடிவு செய்ய வேண்டும். நான் முடிவு செய்ய முடியாது. ஆனால் எனக்கு இப்படி நடந்ததில் ஆச்சரியமில்லை. கடந்த காலங்களில் பல வீரர்களுக்கு பிசிசிஐ வழியனுப்பு விழா நடத்தாமல் இப்படிச் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னை விட்டுவிடுங்கள். ஹர்பஜன், சேவாக், ஜாகீர் கான், கம்பீர் மற்றும் வி.வி.எஸ் லக்ஷ்மன் போன்றோர் பல ஆண்டுகளாக இந்தியாவுக்காக விளையாடி பல்வேறு வெற்றிகளைத் தேடித் தந்துள்ளனர். கம்பீர், சேவாக், ஜாகீர், ஹர்பஜன் இந்தியாவுக்காக இரண்டு கோப்பைகளை வென்றுகொடுத்துள்ளனர்.

வி.வி.எஸ் லக்ஷ்மன் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ளார். அத்தகைய வீரர்கள் நாட்டிற்குச் செய்த சேவைக்காக நிச்சயமாகக் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களின் சர்வதேச வாழ்க்கையை அவ்வளவு சரியாக முடிக்கவில்லை. அவர்களை பிசிசிஐ சுத்தமாகக் கண்டுகொள்ளவில்லை. இதை இப்படியே விட்டுவிடக்கூடாது. எதிர்காலத்தில், நீண்ட காலமாக இந்தியாவுக்காக விளையாடி, இக்கட்டான சூழ்நிலைகளில் இந்தியாவை மீட்கும் எந்த ஒரு வீரரையும் மரியாதையுடன் அனுப்ப வேண்டும்" என்று கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

You'r reading இந்திய கிரிக்கெட்டின் `டார்க் பக்கங்கள்.. யுவராஜ் சிங் பகிர்ந்த கம்பீர், சேவாக்கின் `ஓய்வு வேதனை! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை