பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு அரசியலில் துடிப்புடன் செயல்பட்டுவருகிறார். குறிப்பாக உத்தரப்பிரதேச பிஜேபி அரசுக்கு எதிராக அம்மாநிலத்தில் மையமிட்டுச் செயல்படுகிறார். அதே நேரம் பிஜேபி சைடில் இருந்து பிரியங்காவுக்கு எதிர்ப்புகள் உள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட போதே கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது பிஜேபி. அதன்பின் அவருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை திரும்பப்பெற்றது.இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் மத்திய பிஜேபி அரசு இன்னொரு அதிரடியையும் செய்துள்ளது.
பிரியங்கா காந்தி டெல்லி லூதி ரோட்டில் உள்ள அரசு பங்களாவில் தங்கியிருந்தார். இதனைச் சமீபத்தில் பிஜேபி எம்பி ஒருவருக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. மேலும் உடனே அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. ஜூலை 20க்குள் காலி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் கூடுதல் அவகாசம் பெற்று தற்போது அதே வீட்டில் தங்கி வருகிறார்.எனினும் இந்த மாத இறுதிக்குள் வீட்டை காலி செய்துவிடுவார் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த பங்களாவுக்கு அடுத்துக் குடிவரப் போகிறவர் பிஜேபி எம்பி அணில் பலூனி. கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த பலூனி சமீபத்தில் தான் அதற்கு அறுவைசிகிச்சை செய்தார்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட பிரியங்கா, பலூனியை தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். கூடவே, பலூனி குடும்பத்தை `டீ பார்ட்டிக்கு' அழைப்பு விடுத்தார்.உடல்நலம் சரியில்லாததைக் காரணம் காட்டி டீ பார்ட்டிக்கு போக மறுத்த பலூனி, பதிலுக்குப் பிரியங்கா தன் வீட்டுக்கு வர வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தங்கள் வீட்டில் உத்தரகாண்ட் மீல்ஸ் நன்றாக இருக்கும் என்பதால் பிரியங்கா வர வேண்டும் எனக் கூறியுள்ளார். காங்கிரஸ் - பிஜேபி இடையிலான திடீர் நட்பு பாராட்டல் டெல்லி அரசியல் வட்டாரத்தில் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.