பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ல் பிரான்ஸுக்குச் சென்ற போது ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்தியா - பிரான்ஸ் இடையில் சுமார் 8.6 பில்லியன் டாலர் மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 36 ரஃபேல் போர் விமானம் வாங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஒப்பந்தத்தின் முதல் தொகுப்பாக, 5 ரஃபேல் விமானங்கள் திங்கட்கிழமை பிரான்சில் இருந்து இந்தியா நோக்கி தனது பயணத்தைத் துவக்கியது. ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா விரைந்த ரஃபேல் விமானத்துக்கு நடுவானிலேயே எரிபொருள் நிரப்பும் சோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே, இன்று மதியம் ஹரியானா மாநிலம், அம்பாலா விமானப்படைத் தளத்துக்கு வந்தன.
முன்னதாக அம்பாலா விமான தளம் வருவதற்கு முன்னதாகவே, ரஃபேல் விமானங்கள் இந்திய வான் எல்லையைத் தொட்டதும் அதனை வரவேற்க நவீன சுகோய்-30 ரக விமானங்கள் இரண்டு வானில் வரவேற்பு நடத்தியது. பின்னர் சுகோய்-30 ரக விமானங்கள் பாதுகாப்புக்காக வர ரஃபேல் விமானங்கள் அம்பாலா விமான தளத்தை அடைந்தது. அப்போதும் விமான தளத்தில் ரஃபேலுக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 23 வருடங்களுக்கு முன்பு, ரஷ்யாவிடம் இருந்து சுகோய் 30 எம்கேஐ ரக விமானங்கள் வாங்கப்பட்டது. அதன்பிறகு, வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட போர்விமானம் என்றால் அது ரஃபேல் தான்.
இந்த விமானத்தில் பிரான்ஸ் ராணுவத் தேவைக்காகத் தனியாக வடிவமைக்கப்பட்ட ஹேமர் தொழில்நுட்பம், அதுபோக அதிநவீன ராடார் வசதிகள், எதிரிநாட்டு ராடாரில் சிக்காமல் தப்பிக்கும் வசதிகள் போன்றவை உள்ளன. ரஃபேல் இந்திய வரவைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தன் டிவிட்டர் பக்கத்தில், ``பிரான்சில் இருந்து பறந்துவந்த இயந்திர பறவைகள் (ரஃபேல்) பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளன. ரஃபேல் விமான வருகையால் இந்திய ராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ரஃபேலால் இந்திய ராணுவத்தின் பலம் வலுப்படும் மற்றும் ராணுவத்தில் புதிய புரட்சி ஏற்படும்" எனக் கூறியுள்ளார்.