வெளிமாநிலங்கள் செல்ல இ-பாஸ் தேவையில்லை.. மத்திய அரசு அறிவிப்பு..

Unlock 3.0 guidelines released Home ministry.

by எஸ். எம். கணபதி, Jul 30, 2020, 08:56 AM IST

தனிநபர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்வதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறப்பதற்கு ஆக.31 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து 4 முறை நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு கட்டமாகத் தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. 3வது கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :இரவு 7 மணிக்கு மேல் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடு ரத்து செய்யப்படுகிறது. இதனால், இரவில் நகருக்குள் பயணம் செய்யலாம். யோகா மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவற்றைத் திறக்கலாம். அதே சமயம், கைகழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவை பின்பற்றப்பட வேண்டும்.

முக கவசம் அணிதல், சமூக விலகல் உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றி, சுதந்திர தின விழாக்களை நடத்தலாம். ஆகஸ்ட் 31-ம் தேதிவரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். மெட்ரோ ரயில், ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள், அரங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை. அரசியல், சமுதாய, கலாச்சாரம், மதம் சார்ந்த மற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை நீடிக்கிறது. வருங்காலத்தில் சூழ்நிலைக்கேற்ப இந்த தடை விலக்கப்படும்.
கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில், ஆகஸ்ட் 31-ம் தேதிவரை ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, அப்பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீங்கலாக மற்ற பகுதிகளில் மாநில அரசுகள் அந்தந்த பகுதி சூழ்நிலைக்கேற்ப தடைகளை விதிக்கலாம். அதே சமயம், மாநிலங்களுக்கு இடையில் தனிநபர்கள் செல்வதற்கும், சரக்குகள் கொண்டு செல்லவும் தடை விதிக்கக் கூடாது. அதற்குத் தனியாக அனுமதியோ, இ-பாஸோ பெறத் தேவையில்லை.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

You'r reading வெளிமாநிலங்கள் செல்ல இ-பாஸ் தேவையில்லை.. மத்திய அரசு அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை