அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு கட்சி மாறியவர் நயினார் நாகேந்திரன். திருநெல்வேலி மாவட்டத்தில் வலுவான செல்வாக்கு இவர் வைத்திருப்பதால் பாஜகவில் சேரும்போதே இவருக்குத் தனி மவுசு இருந்தது. இதனால் எளிதாக இவருக்கு நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கிடைத்தது. ராமநாதபுரம் தொகுதியில் நின்றவர், தோல்வியைத் தழுவியது தனிக்கதை. இதற்கிடையே, தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட, காலியாக இருந்த பாஜக தமிழக தலைவர் பதவிக்கு நயினார் காய் நகர்த்தினார். ஆனால் இந்த முயற்சியில் அவரின் செல்வாக்கு பலிக்கவில்லை. கட்சித் தலைவரானார் எல்.முருகன். அதே நேரம் நயினாரை வருத்தப்பட வைக்கக்கூடாது என்பதற்காகத் துணைத் தலைவர் பொறுப்பு ஒதுக்கியது பாஜக தலைமை.
தலைவர் பதவி கிடைக்காததால் நயினார் மனவருத்தத்தில் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் கசிந்தன. இந்நிலையில் தான் நயினார் மீண்டும் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியானது. இந்த முறை அவர் திமுகவுக்கு போக போவதாகவும் கூறப்பட்டது. அதற்கேற்ப திமுகவும் அவரை வளைக்க முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதற்கு அச்சாரமாக சில தகவல்களும் வெளியில் சொல்லப்பட்டது. சில நாள்களுக்கு முன்னர் திருச்சி சென்ற நயினார், திமுகவின் முதன்மைச் செயலாளர் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவையும், அன்பில் மகேஷையும் சந்தித்தார் என்றும், அவர்கள் மூலம் ஸ்டாலினை சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
திமுகவில் சேருவதற்குப் பலனாக நெல்லை மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும் என்ற நயினார் டிமாண்ட் வைத்துள்ளார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது தனது நிலை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ``வருத்தத்தோடு தான் பாஜகவில் இருக்கிறேன். ஆனாலும் கட்சி மாறப்போவதில்லை. நம்பிக்கையோடு பாஜகவுக்கு வந்தவர்களுக்குத் தலைமை முக்கியத்துவம் தரவில்லை. ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ விஆர் சீனிவாசன் அதிமுகவில் இணைவதைத் தடுத்திருக்க வேண்டும். அதேபோல், வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் திமுகவில் இணைந்தது வேதனை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.