அந்தமானுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் இணைப்பு.. பிரதமர் மோடி ட்வீட்..

by எஸ். எம். கணபதி, Aug 10, 2020, 10:07 AM IST

அந்தமான் நிகோபர் தீவுகளுக்குக் கண்ணாடி நூலிழை இணைப்பு(ஆப்டிகல் பைபர் கேபிள்) இன்று(ஆக.10) முதல் செயல்பட உள்ளதைப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் இருந்து அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 2300 கி.மீ. தூரத்திற்குக் கடலுக்கு அடியில் கண்ணாடி நூலிழை இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த மைல் கல்லாகப் பார்க்கப்படும் இந்த திட்டத்தினால், அந்தமான் தீவுகளில் மக்களுக்கு அதிவிரைவான தொலைத்தொடர்பு சேவைகள் கிடைக்கும்.

ரூ.1224 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று காலை தொடங்கி வைக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்று அந்தமான் நிகோபரில் வசிக்கும் எனது சகோதர, சகோதரிகளுக்கு விசேஷமான நாள். அந்தமான் நிகோபர் தீவுகளுக்குக் கடலுக்கு அடியில் கொண்டு செல்லப்பட்டுள்ள கண்ணாடி நூலிழை இணைப்பு இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்கி வைக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் சென்னை-போர்ட் பிளேயருக்கும், போர்ட் பிளேயரில் இருந்து லிட்டில் அந்தமான், கார்நிகோபர், கமோர்தா, கிரேட் நிகோபர் போன்ற இடங்களுக்கும் அதிவிரைவான மொபைல், இணையதள சேவைகள் கிடைக்கும்.


More India News

அதிகம் படித்தவை