ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் கர்ப்பிணிப் பெண்ணை போலீசார் டிராக்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.ஒடிசாவின் வடக்கு கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியுள்ளதால், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆந்திராவில் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களை உடனடியாக வெளியேற்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.தெலங்கானாவிலும் வாரங்கல் மாவட்டத்தில் பல இடங்கள், நீரில் மூழ்கியுள்ளன. மற்ற மாவட்டங்களிலும் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மஞ்சரியால் மாவட்டம், கோட்டப்பள்ளி தாலுகாவில் வனப்பகுதியில் உள்ள சென்னூர் என்ற கிராமத்திற்குச் செல்லும் சாலை வெள்ளநீரில் மூழ்கியது. இதனால், அந்த கிராமத்திற்கு இணைப்பு சாலை இல்லாமல் துண்டானது.
இந்நிலையில், அந்த கிராமத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் ஒரு டிராக்டரில் கர்ப்பிணியை அழைத்துக் கொண்டு, வெள்ளத்தில் மூழ்கிய சாலை வழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த காட்சியைக் கிராம மக்கள் திகிலுடன் பார்த்தனர். சாலையில் தண்ணீரின் வேகம் அதிகரிக்கும் முன்பாக அந்த டிராக்டர் சாலையைக் கடந்து சென்றது. கர்ப்பிணிப் பெண்ணை பத்திரமாகக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.