வங்கிகளின் ஏடிஎம் என்னும் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்களில் நடைபெறும் மோசடியைத் தடுப்பதற்குப் பாரத ஸ்டேட் வங்கி, ஓடிபி என்னும் ஒருமுறை பயன்படக்கூடிய இரகசிய குறியீட்டெண் வசதியைக் கைக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.சில ஆண்டுகளாக குளோனிங் மற்றும் ஸ்கிமிங் என்னும் மோசடி முறைகளைப் பயன்படுத்தி ஏடிஎம் அட்டைகளை போலியாகத் தயாரித்துச் செய்யப்படும் மோசடி அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்க வங்கிகள் பல பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, பாதுகாப்பு காரணங்களுக்காக 2018ஆம் ஆண்டு சில குறிப்பிட்ட அட்டைகளைக் கொண்டு எடுக்கக்கூடிய தொகையின் அளவை குறைத்தது. தற்போது ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு ஓடிபி பாதுகாப்பு வசதியைப் பயன்படுத்துமாறு டிவிட்டர் பதிவு மூலமாய் கேட்டுக்கொண்டுள்ளது.