இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் அந்த மாநிலத்தில் நோயின் தீவிரம் குறைவாகவே இருந்தது. ஜனவரி மாத இறுதியில் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் முதலில் 3 பேருக்கு மேல் நோய் பரவில்லை. ஆனால் மார்ச் மாதத்திற்குப் பின்னர் மெல்ல மெல்ல நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
நேற்றைய கணக்கின்படி தற்போது 16,274 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 31,394 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 1,758 பேர் பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா பாதித்து நேற்று 6 பேர் மரணம் அடைந்தனர். இதுவரை கொரோனா பாதித்து கேரளாவில் 175 பேர் மரணமடைந்துள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா உள்பட மாநிலங்களை ஒப்பிடும்போது கேரளாவில் நோய் பரவல் குறைவாகும். நோயிலிருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
இந்நிலையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 103 வயதான முதியவர் நேற்று குணமடைந்து தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த 103 வயதான இந்த முதியவருக்கு அவரது மகன் மூலம் நோய் பரவியது. இதையடுத்து கடந்த மாதம் 28ஆம் தேதி இவர் எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிக வயதானவர் என்பதால் மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையிலான சிறப்பு மருத்துக் குழு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தது.
இந்நிலையில் 20 நாள் சிகிச்சைக்குப் பின்னர் அந்த முதியவர் முழு உடல் நலம் தேறினார். இதையடுத்து நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல கேரளாவில் ஏற்கனவே 105 வயது மூதாட்டியும், 93 மற்றும் 88 வயதான ஒரு தம்பதியும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி தங்கள் வீடுகளுக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.