தங்கள் குடும்பத்தைச் சேராத ஒருவர்தான் காங்கிரஸ் தலைவராக வர வேண்டுமென்று விரும்புவதாகப் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது. தோல்வி குறித்து விவாதிக்கக் கடந்தாண்டு மே மாதம் 25ம் தேதியன்று காங்கிரஸ் செயற்குழு கூடியது. அதில், தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல்காந்தி அறிவித்தார். அவரை மூத்த தலைவர்கள் சமாதானப்படுத்தி, தலைவராக நீடிக்கக் கூறினர். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை.
இதனால், மூத்த தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராகச் சோனியா காந்தி பொறுப்பேற்றார். அதன்பிறகு, இது வரை முழு நேரத் தலைவர் தேர்வு செய்யப்படவில்லை. ராகுல்காந்தி அல்லது பிரியங்கா காந்தி ஆகியோரில் ஒருவரே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அதுவே கட்சிக்கு வலு சேர்க்கும் என்றும் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ஆனால், பாஜகவினர் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை நேரு குடும்பத்துக் கட்சி என்று விமர்சித்து வருகின்றனர். அதனால், ராகுல்காந்தி வெளிப்படையாகத் தான் தலைவராக விரும்பவில்லை என்றும் நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரே தலைவராக வர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்தியா நாளை- அடுத்த தலைமுறை தலைவர்களின் கருத்து என்ற தலைப்பில் பிரதீப்சிப்பர், ஹர்ஷ் ஷா ஆகியோர் எழுதிய புத்தகம் வெளியாகியுள்ளது. அதில், பிரியங்கா காந்தியின் பேட்டியும் வந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவரே தலைமை ஏற்க வேண்டும் என்ற ராகுல்காந்தியின் கருத்தைத் தாம் ஏற்றுக் கொள்வதாகப் பிரியங்கா குறிப்பிட்டிருக்கிறார். அதே போல், கட்சித் தலைவராகத் தாம் பொறுப்பேற்க விரும்பவில்லை என்றும் நிராகரித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களிடையே இந்த தகவல் கவலையைத் தந்துள்ளது. புதிய தலைவராக அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரைத் தேர்வு செய்வது எப்போது என்ற கேள்வி அவர்களுக்குக் கவலையைக் கொடுத்திருக்கிறது.