கொரோனாவால் கிரிக்கெட் உள்ளிட்ட மொத்த விளையாட்டுகளும் முடங்கிப் போயிருக்கிறது. சில விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்தக் கொரோனா காலத்திலும் பிசிசிஐ தனது வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஊரே கொரோனா தொற்றால் அவதியுற்று இருக்கும் வேளையில் பிசிசிஐ துணிச்சலாக ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என்று அறிவித்தது. மேலும், செப்டம்பர் 19ம் தேதி அமீரகத்தில் தொடங்கும் என அறிவித்து, அதற்கான அனுமதியையும் வாங்கிவிட்டது. வீரர்களும் தங்கள் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் அவர்கள் விமானம் ஏறிவிடுவார்கள்.
பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில்தான் இந்த தொடர் நடக்கவிருக்கிறது. ஏற்கனவே சீனா உடனான மோதல் காரணமாக விவோ நிறுவனம் தனது ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக்கொள்ள, நீண்ட இழுபறிக்குப் பின்னர் தற்போது ட்ரீம் 11 நிறுவனம் ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்ய ஒப்பந்தம் ஆகியிருக்கிறது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதை பிசிசிஐ நிறுத்த வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லாகூ என்னும் அந்த வழக்கறிஞர், ``ஐபிஎல் ஒன்னும் அறக்கட்டளை நிகழ்ச்சி கிடையாது. ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டில் நடத்தப்பட்டால் இந்தியாவுக்குப் பொருளாதாரம், வருவாய் இழப்பு ஏற்படும். போட்டியை இந்தியாவில் நடத்தினால், பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும். தற்போதுள்ள கொரோனா சூழலில் நாட்டிற்கு இதுதான் மிகவும் அவசியமானது" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். நாளை மறுதினம் வீரர்கள் துபாய் புறப்பட்டுச் செல்ல இருக்கும் நிலையில், இந்த வழக்கு விசாரணை விரைவில் நடக்கவிருக்கிறது. இதனால் ஐபிஎல் போட்டி நடப்பதில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.