மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரிசபாவா. இவர் 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கொச்சியைச் சேர்ந்த சாதிக் என்பவரிடம் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ₹11 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் பல வருடங்களாக அந்த பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை. . கடந்த வருடம் சாதிக்கிடம் ரிசபாவா ₹11 லட்சத்திற்கான ஒரு காசோலை கொடுத்தார்.
ஆனால் வங்கியில் போதிய பணம் இல்லாததால் காசோலை திரும்பி விட்டது. இதனால் ரிசபாவாவுக்கு எதிராக சாதிக் எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணைக்காகப் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ரிசபாவா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆகஸ்ட் 19ம் தேதி ரிசபாவா கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி 11 லட்சம் பணத்தை கட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் நேற்றும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நடிகர் ரிசபாவாவுக்கு எதிராக எர்ணாகுளம் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நடிகர் ரிசபாவா நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் 11 லட்சம் பணத்தையும் அவர் கட்டினார். ஆனாலும் குறிப்பிட்ட தேதியில் நேரில் ஆஜராகி பணத்தைக் கட்டாததால் இன்றைய அலுவல் நேரம் முடியும் வரை நீதிமன்றத்தில் காத்திருக்க வேண்டும் என்று ரிசபாவாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மாலை வரை நீதிமன்றத்தில் காத்திருந்தார்.