மனிதர்களை கொரோனா படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல..... திருமணம், இறுதிச்சடங்கு உள்பட மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் எதிலும் யாராலும் கலந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. மிக நெருங்கிய உறவினர்களாக இருந்தபோதிலும், திருமணத்தையோ, நெருங்கிய உறவினர்கள் இறந்தால் அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளையோ வீடியோவில் தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு வயதான தம்பதி தங்களது பேரனின் திருமணத்தைப் பார்க்க பாலக்காட்டிலிருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் சென்ற ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
பாலக்காடு அருகே உள்ளது கல்பாத்தி கிராமம். இயற்கை எழில் சூழ்ந்த இந்த கிராமம் தேர்த் திருவிழாவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பெரும்பாலும் தமிழ் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் இங்கு அதிகமாக வசிக்கின்றனர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (90). இவரது மனைவி சரஸ்வதி (85). இவர்களது மகன் நாராயணன் குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் லண்டனில் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சந்தோஷுக்கு பெங்களூருவில் இன்று திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. தற்போது கொரோனா காலம் என்பதால் மிகக் குறைவான நெருங்கிய உறவினர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைத்திருந்தனர். பாலக்காட்டில் உள்ள லட்சுமி நாராயணனுக்கும், சரஸ்வதிக்கும் தங்களது பேரனின் திருமணத்தைப் பார்க்க வேண்டுமென்று மிகுந்த ஆவல் இருந்தது. ஆனால் கொரோனா காலம் என்பதால் பெங்களூருவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வயதானவர்கள் என்பதால் அதுவும் ஒரு சிரமமாக இருந்தது. ஆனாலும் தங்களது பேரன் திருமணத்தை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருவரது மனதை விட்டும் நீங்கவில்லை. தங்களது விருப்பத்தை மகன் நாராயணனிடம் தெரிவித்தனர். முதலில் அவர் சம்மதிக்காவிட்டாலும் கடைசியில் தனது பெற்றோரின் ஆவலைப் பூர்த்தி செய்ய நாராயணன் தீர்மானித்தார்.
ரயிலிலோ, சாலை வழியாகவோ அல்லது விமானத்திலோ வந்தால் 2 வாரம் தனிமையில் இருக்க வேண்டும். எனவே என்ன செய்யலாம் என்று யோசித்த போதுதான் சில நண்பர்கள் ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து இருவரையும் அழைத்து வரலாமே என்று நாராயணனிடம் ஒரு யோசனை தெரிவித்தனர். அதுவும் நல்ல யோசனையாக இருக்கிறதே எனக் கருதிய நாராயணன் உடனடியாக ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துப் பெற்றோரை அழைத்து வர முடிவு செய்தார். இதன்படி நேற்று லட்சுமி நாராயணனும், அவரது மனைவி சரஸ்வதியும் பாலக்காட்டில் இருந்து பெங்களூருக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டனர். இன்று பெங்களூருவில் உள்ள இஸ்கான் கோயில் வளாகத்தில் சந்தோஷின் திருமணம் நடந்தது. மிக மகிழ்ச்சியாக தங்களது பேரனின் திருமணத்தில் தாத்தாவும், பாட்டியும் கலந்து கொண்டனர்.
திருமணம் முடிந்த பிறகு மாலையில் அதே ஹெலிகாப்டரில் இருவரும் பாலக்காடு திரும்பத் திட்டமிட்டுள்ளனர். பாலக்காட்டிலிருந்து பெங்களூருவுக்கு ஹெலிகாப்டரில் சென்று வர செலவு 8 லட்சம் ஆகும். ஆனால் அதைப்பற்றி எல்லாம் நாராயணன் கவலைப்படவில்லை. தனது பெற்றோரின் ஆசைக்கு முன்னால் பணம் ஒரு பொருட்டல்ல என்று நாராயணன் கூறுகிறார். ஹெலிகாப்டரில் தனது பேரனின் திருமணத்திற்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லட்சுமி நாராயணன் ஒரு எழுத்தாளரும் ஆவார். 'காவேரி டூ நிலா' ,'ஹிஸ்டரி ஆப் தி தமிழ் அக்ரஹாரம் ஆஃப் பாலக்காடு' என்ற இரண்டு நூல்களையும் இவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.