திருவனந்தபுரம் அரசு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் மாநில புரோட்டோகால் தலைமை அதிகாரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் மர்மம் இருப்பதாகக் காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் இந்த புரோட்டாகால் அலுவலத்தில் இருப்பதாகவும், அந்த ஆவணங்கள் இந்த வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பான என் ஐ ஏ விடம் சிக்காமல் இருப்பதற்காகவே இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதற்கிடையே இந்த தீ விபத்து குறித்து அறிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களான சிவகுமார், பல்ராம், சபரிநாதன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தலைமைச் செயலகத்தை நோக்கிப் படையெடுத்தனர். தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கூறினர். ஆனால் எம்எல்எக்களை தலைமைச் செயலகத்தில் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரமேஷ் சென்னித்தலா தலைமையில் எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் தலைமைச் செயலகத்தின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் தலைமையில் பாஜக தொண்டர்களும் அங்குத் திரண்டனர். அவர்களும் தலைமைச் செயலகத்திற்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்த போராட்டத்தால் தலைமைச் செயலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே காங்கிரசாரின் போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை உள்ளே விட போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து அவர்கள் தீ விபத்து நடந்த புரோட்டோகால் அலுவலகத்தைப் பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், தூதரக தங்கக் கடத்தல் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் புரோட்டாகால் அலுவலகத்தில் உள்ளது. அந்த ஆவணங்கள் தான் தற்போது தீ விபத்தில் எரிந்துள்ளது. இது திட்டமிட்ட சதியாகும் என்றார். இந்த தீ விபத்து சம்பவம் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தக் காங்கிரசும் பாஜகவும் திட்டமிட்டுள்ளது.