ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயை முதலீடு செய்தது.
இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்குசொந்தமான நிறுவனம் உதவியதாகவும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.
அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங் என்ற நிறுவனத்தின் ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.