காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல் தொடர்ந்து வருகிறது. நேற்று(ஆக.28) நள்ளிரவில் நடந்த என்கவுன்டரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.ஆனாலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் தொடர்ந்து ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். அவர்களை ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து ஊடுருவலை தடுத்து வருகின்றனர். ஆயினும் தீவிரவாதிகள் ஜம்முகாஷ்மீருக்குள் ஊடுருவி பதுங்கி வருகின்றனர்.
காஷ்மீரில் புல்வாமாவின் ஜடூரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினருடன் மாநில காவல் துறையினரும் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டடையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 3 அடையாளம் தெரியாதா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மோதலில் ஒரு ராணுவ வீரருக்கு படுகாயம் ஏற்பட்டது. நள்ளிரவு முதல் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் அப்பகுதியில் முகாமிட்டு, தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.