பேஸ்புக் சமூக ஊடகத்தில், மக்கள் பாரபட்சமற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவதற்கு, சரியான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர் பெர்க்கிற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள், பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதையும் அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தது குறித்தும் பல்வேறு செய்திகள் வெளியாயின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இது பற்றி நேரடியாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, வலதுசாரி சிந்தனையாளர்களின் பேஸ்புக் பக்கங்களை வேண்டுமென்றே முடக்கினர். அவர்களின் கருத்துக்கள் வெளிவராத வகையில் தடுக்கப்பட்டது. இதற்கு இந்தியாவில் உள்ள இந்நிறுவனத்தின் சில ஊழியர்களே காரணமாகும்.இவ்வாறு அவர்கள் பாரபட்சமாகச் செயல்பட்டதற்கான ஆதாரங்களை அளித்த போது, அந்த நிர்வாகம் சரியாகப் பதிலளிக்கவில்லை. பேஸ்புக் நிறுவனத்தின் சில ஊழியர்கள், சர்வதேச ஊடகங்களுடன் இணைந்து செயல்பட்டு, இந்தியாவின் ஜனநாயக நடைமுறைகளில் தலையீடு செய்திருக்கின்றனர்.
இந்தியாவில் நிலவிவரும் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கில், பேஸ்புக்கை சில சமூக விரோத சக்திகள் பயன்படுத்தி வருகின்றன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவையின் மீது அவதூறு பரப்பும் விஷமத்தனமான வேலைகளைத் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். எனவே, தரவுகளைச் சரிபார்க்கும் பணியைப் பாதுகாப்பற்ற தனியார் நிறுவனங்களிடம் பேஸ்புக் நிறுவனம் ஒப்படைக்கக் கூடாது.மேலும், பாரபட்சமற்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு ஏற்ப சரியான வழிகாட்டு நெறிமுறைகளை பேஸ்புக் நிறுவனம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.