மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நரேந்திர மோடிக்கு பணம் கொடுப்பது யார்? என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கூறியுள்ள அபிஷேக் சிங்வி, “பிரதமர் மோடியின் திட்டமிட்ட விமானப் பயணத்திற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்று தேச மக்களும், நாங்களும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இதுவரை எந்த தகவலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த 2003ஆம் ஆண்டு முதல் இருந்து, 2007ஆம் ஆண்டு வரை நூறு முறைக்கும் மேல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், ஆனால், அதற்கு பணம் யார் கொடுத்துள்ளார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவிர, 2006 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி சீனாவிற்கும், 2007 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தென் கொரியாவுக்கும், 2007 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சுவிட்சர்லாந்துக்கும், 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி ஜப்பானுக்கும் அங்குள்ள பெரு முதலாளிகளை சந்திக்க சென்றுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.