கொரோனா தடுப்புக்கு ஹோமியோ நல்லது அமைச்சரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

by Nishanth, Sep 7, 2020, 17:58 PM IST

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அரசு ஹோமியோ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ₹26 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியது: கொரோனா தடுப்புக்கு ஹோமியோ மருந்து நல்லது எனத் தெரியவந்துள்ளது. பத்தனம் திட்டா ஹோமியோபதி சிறப்பு அதிகாரி டாக்டர் பிஜு தலைமையிலான டாக்டர்கள் குழு நடத்திய ஆய்வின் மூலம் இது தெரிய வந்துள்ளது.

கொரோனா வராமல் தடுப்பதற்கு ஹோமியோ நல்ல பலன் செய்கிறது என ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அதனால் தான் கேரளா முழுவதும் அனைவருக்கும் இலவசமாக ஹோமியோ மருந்து வினியோகம் செய்யப்பட்டது. இந்த மருந்தைச் சாப்பிட்ட சிலருக்கு மட்டுமே கொரோனா வந்துள்ளது. அப்படி நோய் வந்தவர்களுக்கும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் குணமாகி விட்டது. இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆனால் அமைச்சர் சைலஜாவின் இந்த கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது மருத்துவ ரீதியாக உறுதி செய்யப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். கேரளாவில் கடந்த சில மாதங்களாகச் சுகாதாரத் துறை சார்பில் ஆர்சனிக் ஆல்பம் 30சி என்ற ஹோமியோ தடுப்பு மருந்து வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை