பாஜக ராஜ்ய சபா எம்பியான சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் ஒரு டுவீட் பதிவிட்டுருந்தார். அதில், ``பாஜக ஐடி விங் முரட்டுத்தனமாகி விட்டது. அது கட்சியின் கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறது பாஜக உறுப்பினர்கள் போலி டிவிட்டர் கணக்குகளை ஓப்பன் செய்து அதில் இருந்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களின் செயலுக்குக் கோபமடைந்து என்னை பின் தொடர்பவர்கள் பதிலடி கொடுக்க தனிப்பட்ட தாக்குதல் மேற்கொண்டால், பாஜகவின் முரட்டுத்தனமான செயல்களுக்கும் பாஜக பொறுப்பேற்க முடியாதது போல, என்னைப் பின்தொடர்பவர்களின் செயலுக்கும் நான் பொறுப்பேற்க மாட்டேன்" என்று அதிரடியாக கூறிஇருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமி மீதான பாஜக ஐடி விங் தாக்குதலுக்கு காரணம், பாஜகவில் இருந்து பாஜகவின் தலைவர்களை விமர்சித்து வந்ததுதான். மத்திய அரசின் பல்வேறு, நடவடிக்கைகளை குறை கூறி வந்தார். இதனால் தான் பாஜக ஐடி விங் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இதன்பின்னரே இப்படி ஒரு டுவீட்டை போட்டு பரபரப்புக்கு உள்ளாக்கினார். இருந்தும் இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது மீண்டும் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், ``பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியா நாளைக்குள் அந்த பொறுப்பில் இருந்து நீக்காவிட்டால், கட்சி என்னை பாதுகாக்க விரும்பவில்லை என்பதாகத்தான் அர்த்தம். எனவே நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டும்" என்று மீண்டும் எச்சரிக்கை விடுத்துளளார்.