ரபேல் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்ப்பு.. பிரான்ஸ் அமைச்சர் பங்கேற்பு..

by எஸ். எம். கணபதி, Sep 10, 2020, 09:12 AM IST

பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இன்று, முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், பிரான்ஸ் அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பங்கேற்கின்றனர்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கக் கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மத்திய அரசுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும் இந்து ஆங்கில நாளிதழில் என்.ராம் எழுதி வந்தார். இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.இதன் பின்னர், முதற்கட்டமாக 5 ரபேல் விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன. இந்த போர் விமானங்களை முறைப்படி விமானப்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி இன்று காலையில் அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது. 5 ரபேல் விமானங்களும், விமானப்படையின் கோல்டன் ஆரோஸ் எனப்படும் 17வது பிரிவில் இணைக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு, முதல் விமானத்தை வாங்குவதற்காக பிரான்ஸ் சென்றிருந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விமானத்திற்குப் பொட்டு வைத்து, எலுமிச்சை பழம் வைத்து பூஜை நடத்தினார்.அதே போல், இன்றும் பூஜைகள் நடத்தி அதன்பிறகு விமானங்கள் படையில் சேர்க்கப்படுகின்றன. நிகழ்ச்சியில். சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி பங்கேற்கிறார். மேலும், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் விமானப்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். அதைத்தொடர்ந்து, பிரான்ஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.ரபேல் விமானம் இரட்டை இன்ஞின்களை கொண்டிருப்பதால், மழைக்காலத்திலும் சிறப்பாகச் செயல்படும். வானிலிருந்து தரையில் உள்ள இலக்குகளையும், வான் இலக்குகளையும் தாக்கும் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.


More India News

அதிகம் படித்தவை