3 மாத கர்ப்பிணி தற்கொலை டிவி நடிகைக்கு வலைவீச்சு

by Nishanth, Sep 10, 2020, 17:43 PM IST

கேரளாவில் வாலிபர் ஏமாற்றியதால் மூன்று மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் டிவி நடிகையை போலீசார் தேடி வருகின்றனர்.கொல்லம் அருகே உள்ள கொட்டியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹாரிஸ் (24). இவர் அப்பகுதியைச் சேர்ந்த ரம்சி (24) என்ற பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்தார். இந்த திருமணத்திற்கு இரு வீட்டினரும் முதலில் சம்மதம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து ஹாரிசும், ரம்சியும் திருமண கனவுகளில் மிதந்தனர். இருவரும் பல இடங்களுக்குத் தனியாகச் சென்று வந்தனர். ஹாரிஸின் அண்ணன் மனைவி லட்சுமி பிரமோத். இவர் பிரபல டிவி நடிகை ஆவார். இவருக்கும் ரம்சிக்கும் நல்ல தொடர்பு இருந்து வந்தது. இருவரும் சேர்ந்து பல டிக் டாக் வீடியோக்களை செய்துள்ளனர்.

இந்நிலையில் ரம்சி கர்ப்பிணியானார்.இதன்பின்னர் ஹாரிஸ் அவரை மெதுவாக ஒதுக்கத் தொடங்கினார். இதற்கிடையே ஹாரிசுக்கு அவரது வீட்டில் வேறு இடத்தில் பெண் பார்க்கத் தொடங்கினர். இதை அறிந்த ரம்சி கடும் மன வேதனை அடைந்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் ரம்சி, ஹாரிசுக்கு போன் செய்து தன்னை ஒதுக்குவது ஏன் என்று கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் சரியாகப் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து ஹாரிசின் தாயை அழைத்து ரம்சி பேசினார். ஆனால் அவர், தனது மகனுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்திருப்பதாகவும், அவனை மறந்து விடவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்சி, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று ரம்சியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ரம்சி தற்கொலை செய்தபோது அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். தொடர்ந்து ஹாரிசை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஹாரிசுடன் சேர்ந்து ரம்சியை நடிகை லட்சுமி பிரமோதும் தற்கொலைக்குத் தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து நடிகை லட்சுமி பிரமோதை போலீசார் தேடி வருகின்றனர்.

READ MORE ABOUT :

More Crime News

அதிகம் படித்தவை