கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வாழூர் என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (33). இவர் தன்னுடைய வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு அப்பு என்று இவர் பெயர் வைத்துள்ளார். ராஜேஷ் வழக்கமாக அதிகாலையில் அடுத்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் பால் வாங்கச் செல்வது வழக்கம். அப்போது ராஜேஷுடன் அப்புவும் செல்லும்.
வழக்கம்போல இன்று காலை ராஜேஷ் பால் வாங்குவதற்காகக் கையில் பாத்திரத்துடன் புறப்பட்டுச் சென்றார். அப்பு அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. நேற்றிரவு இரவு அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் வழியில் ஒரு மின் கம்பி அறுந்து கிடந்தது.
அதிகாலை நேரம் என்பதால் அந்த மின் கம்பியை யாரும் கவனிக்கவில்லை. ராஜேஷின் முன்னால் சென்றுகொண்டிருந்த அப்பு, அந்த மின்கம்பியைக் கவனித்து விட்டது. உடனடியாக பாய்ந்து சென்று அந்த மின்கம்பியை வாயால் கவ்விப் பிடித்து அப்புறப்படுத்த முயன்றது. ஆனால் மின்சாரம் தாக்கியதால் அந்த நாய் அங்கேயே துடிதுடித்து இறந்தது. அந்த நாய் மின்கம்பியைப் பார்த்து இருக்காவிட்டால் நாய்க்குப் பதிலாக ராஜேஷ் தான் இறந்திருப்பார். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிய தன்னுடைய செல்ல நாயை எண்ணி அவர் கண்ணீர் விட்டார்.