`ஒரு ஆப்ரேஷன் செய்தால் உயிர் பிழைத்திருப்பார்.. பணத்தால் பறிபோன வடிவேல் பாலாஜியின் உயிர்?!

by Sasitharan, Sep 10, 2020, 17:55 PM IST

பிரபல டிவி நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு சின்னதிரை நடிகர்கள் மட்டுமில்லாமல், வெள்ளித்திரை நடிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்குப் பின்னணியில் இருக்கும் சோகமான சம்பவங்கள் தற்போது தெரியவந்துள்ளன. கொரோனா லாக் டவுன் காரணமாக வடிவேல் பாலாஜி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். லாக் டவுனால் இந்த நான்கு மாதங்களாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாமல் வருமானம் இல்லாமல் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. வடிவேல் பாலாஜி குடும்பத்தில் அவர் மட்டுமே சம்பாதிக்கக்கூடியவர். இதனால் இந்த நான்கு மாதங்களாக எந்த வேலையும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் சிரமப்பட்டு வந்திருக்கிறார். இதனால் ஒருகட்டத்தில் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

சமீபத்தில் விஜய் டிவி மீண்டும் நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்துள்ளது. அதன்படி மிஸ்டர் & மிஸஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் சோகத்துக்கு மத்தியிலும் பங்கேற்றிருக்கிறார் பாலாஜி. நிகழ்ச்சியில் பங்கேற்ற சக கலைஞர்களிடம் லாக் டவுனில் தான் அனுபவித்த கஷ்டங்களைப் பகிர்ந்துள்ளார். அப்போதும் கஷ்டங்களை ஜாலியாகவே பேசி அவர்களை எப்போதும் போலச் சிரிக்க வைத்திருக்கிறார். இதற்கிடையே, 15 நாட்களுக்கு முன்பு மிஸ்டர் & மிஸஸ் நிகழ்ச்சியின் பாதியிலேயே பாலாஜி வெளியேறியிருக்கிறார். 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார். இது அவருக்கு இரண்டாவது மாரடைப்பு எனக் கூறப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே மாரடைப்பால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்திருக்கிறார். இதற்கிடையே சமீபத்தில் அட்டாக் ஏற்பட, முதலில் அவரை தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.

மாரடைப்பு வந்தபோதே பாலாஜியின் கை, கால்களும் செயல் இழந்த நிலையில் இருந்துள்ளன. இதனால் மிகுந்த சிரமத்தை அவர் அனுபவித்துள்ளார். இருந்த கொஞ்ச நஞ்ச பணமும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சரியாக இருந்திருக்கிறது. இதையடுத்து இன்னொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கும் மருத்துவச் செலவுக்குப் பணம் எகிறியுள்ளது. மேற்கொண்டு சிகிச்சை அளிக்க அவரின் குடும்பத்தினரிடம் பணம் இல்லை என்பதால், பலரிடம் உதவி கேட்டுள்ளனர். எங்கும் உதவி கிடைக்காததை அடுத்து, சில நாட்கள் கழித்து தனியார் மருத்துவமனையில் இருந்த பாலாஜி ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்குச் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரின் உயிர் பிரிந்துள்ளது. 42 வயதாகும் வடிவேல் பாலாஜிக்கு 1 மகனும், மகளும் உள்ளனர். பாலாஜியின் மனைவிக்கு எழுத, படிக்கக் கூட தெரியாது எனக் கூறப்படுகிறது. அவரின் குடும்பத்தில் பாலாஜி மட்டுமே சம்பாதித்து வந்துள்ளார். இப்போது அவர் மறைந்துவிட, அவரின் குடும்பம் நடுக்காட்டில் நிர்கதியாக உள்ளது.

கைகொடுக்காத சேனல்?!

தொடர்ந்து தனியார் மருத்துவமனையிலேயே பாலாஜி சிகிச்சை பெற்று வந்திருந்தால் இந்நேரம் அவர் உயிரிழந்திருக்க மாட்டார் எனப் புலம்புகின்றனர் அவரது உறவினர்கள். ஆனால் அங்குச் சிகிச்சைக்கு இருந்த பணத்தைச் செலவழித்த பின்பும், ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டி இருந்துள்ளது. அதற்காகப் பணம் இல்லாமல் பலரிடம் பணம் கேட்டுத் தவித்துள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காத நிலையிலேயே, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, 13 வருடங்களாக விஜய் டிவியில், வடிவேல் பாலாஜி பணி புரிந்துவந்துள்ளார். அவர் உடல் நிலை சரியில்லாத தகவல் சேனல் நிர்வாகத்துக்குத் தெரிந்தும் அவர்கள் உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை