ஆலங்கட்டி மழையில் ஆப்பிள் செடியை பாதுகாக்க புதிய திட்டம்..

by எஸ். எம். கணபதி, Sep 11, 2020, 12:47 PM IST

காஷ்மீரில் ஆலங்கட்டி மழையில் இருந்து ஆப்பிள் பயிர்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டத்தை அம்மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
காஷ்மீர் ஆப்பிள், உலக அளவில் பிரபலமானது. பல நாடுகளுக்கு காஷ்மீரில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆக.5ம் தேதி, காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது பல மாதங்களுக்கு பிறகு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும், அடுத்து கொரோனா ஊரடங்கு வந்து விட்டது. இதன்காரணமாக, ஜம்மு காஷ்மீரில் ஆப்பிள் சாகுபடியே நின்று போய் விட்டது. காய்த்து தொங்கிய மரங்களும் பாதிக்கப்பட்டன. ஏற்றுமதியும் தடைபட்டு போனது.


தற்போது மீண்டும் ஆப்பிள் சாகுபடி தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் அடிக்கடி சிறிய ஐஸ்கட்டிகளாக ஆலங்கட்டி மழை பெய்வதுண்டு. இதில், ஆப்பிள் செடிகள் பாதித்து வீணாகி போய் விடும். இதற்கு தீர்வு காண்பதற்கு அந்த ஐஸ் கட்டிகளை தாங்கும் அளவுக்கு ஒரு வலையை ஷெர் இ காஷ்மீர் வேளாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தயாரித்துள்ளது.
இது குறித்து, ஆப்பிள் சாகுபடியாளர் ஒருவர் கூறுகையில், இந்த வலை எந்த காலத்திலும் பாதிக்காது. அதே போல், பயிருக்கான சூரிய வெப்பம், காற்றோட்டம் போன்றவற்றையும் தடுக்காது. இதை பயன்படுத்துவதால், ஆலங்கட்டி மழையில் இருந்து செடிகளை பாதுகாக்க முடியும். அதே போல், பறவைகளிடம் இருந்தும் இ்ந்த செடிகளை காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார்.


More India News

அதிகம் படித்தவை