அர்னாப் கோஸ்வாமிக்கு அனுராக் கஷ்யப் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

by Nishanth, Sep 11, 2020, 16:07 PM IST

பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு டைரக்டரும், நடிகருமான அனுராக் கஷ்யப்பும், ஸ்டேன்ட் அப் காமெடியன் குனால் கம்ராவும் சேர்ந்து பிரேம் போட்ட செருப்புகளைப் பரிசாகக் கொடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.ரிபப்ளிக் டிவியின் தலைவரும், பிரபல பத்திரிகையாளருமான அர்னாப் கோஸ்வாமியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகவும் ஆக்ரோஷமாக டிவியில் அரசியல் விவாதம் நடத்தும் இவரது நடவடிக்கைகளுக்குப் பல அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுனந்தா புஷ்கரின் மரணத்திற்குக் கணவர் சசி தரூர் தான் காரணம் என்று கூறியதைத் தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக சசி தரூர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மும்பையிலிருந்து லக்னோ செல்லும் இண்டிகோ விமானத்தில் வைத்து பிரபல ஸ்டேன்ட் அப் காமெடியன் குனால் கம்ரா, அர்னாப் கோஸ்வாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குனால் கம்ராவுக்கு இண்டிகோ விமானம் தடை விதித்தது.இந்நிலையில் பிரபல பாலிவுட் டைரக்டரும், நடிகருமான அனுராக் கஷ்யப்பும், குனால் கம்ராவும் நேற்று 2 பார்சல்களுடன் அர்னாப் கோஸ்வாமியை சந்திப்பதற்காக ரிபப்ளிக் டிவி அலுவலகத்திற்குச் சென்றனர். அர்னாப் கோஸ்வாமியை சந்திக்க வேண்டும் என்றும், சிறந்த பத்திரிகையாளரான அவருக்குச் செருப்புகளைப் பரிசாகக் கொடுக்க வந்திருப்பதாகவும் அங்கிருந்த காவலாளிகளிடம் அவர்கள் கூறினர்.

ஆனால் முன் அனுமதி இல்லாததால் அர்னாபை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று அங்கிருந்த காவலாளிகள் கூறினர். இதனால் இருவரும் அங்கிருந்து திரும்பினர். இந்த தகவலை இருவரும் தங்களது டிவிட்டரில் தெரிவித்துள்ளனர். பிரேம் போட்ட 2 செருப்புகளைக் கையில் பிடித்தபடி நிற்பது போன்ற போட்டோவையும் அவர்கள் டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர். இன்று என்னுடைய சிறப்பான பிறந்த நாளாகும்.
அர்னாப்பை சந்திப்பதற்காக ஒரு பரிசுடன் நானும் கம்ராவும் சென்றோம். ஆனால் காவலாளிகள் எங்களை உள்ளே விடவில்லை என்று அனுராக் கஷ்யப் தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பிறந்த நாள் கொண்டாடும் அனுராக்குடன் அர்னாபை சந்தித்து அவருக்குச் சிறந்த பத்திரிகையாளருக்கான விருதைக் கொடுப்பதற்காக நானும் சென்றேன். ஆனால் எங்களைக் காவலாளிகள் அனுமதிக்கவில்லை என்று குனால் கம்ரா தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


More India News