20 தொகுதி பிளான்.. 2026 டார்கெட்.. கேரள பாஜகவின் அடடே வியூகம்!

by Sasitharan, Sep 12, 2020, 18:30 PM IST

தென்னிந்தியாவில், கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு சொல்லிக்கொள்ளும் படியான செல்வாக்கு இல்லை என்பதே உண்மை. தமிழகத்தில் இன்னும் தனது சட்டப்பேரவை கணக்கை பாஜக துவக்கவே இல்லை என்பதை கூறலாம். கேரளாவில் ஒரே ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை கொண்டுள்ளது அந்தக் கட்சி. தமிழகத்தில் பாஜகவுக்கு எதிரான மன நிலையில் மக்கள் இருப்பதால் அடுத்த முறையும் இங்கு பாஜக ஜெயிப்பது கேள்விகுறிதான். இதனால் கேரளாவில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது அக்கட்சி. இன்னும் ஒரு சில மாதங்களில் கேரளாவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, புதிய பிளானுடன் தேர்தல் பணிகளை இப்போதே செய்யத் தொடங்கியுள்ளது அக்கட்சி.

மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள கேரளாவில், தற்போது 20 தொகுதிகளை மட்டுமே டார்கெட் செய்து, அக்கட்சி உழைக்கத் தொடங்கியுள்ளது. அதென்ன 20 தொகுதி கணக்கு என்பதன் பின்னணியும் தற்போது வெளியாகியுள்ளன. ``கேரளத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் உடனே ஆட்சிக்கு வந்துவிடும் இடத்தில் பாஜக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், கேரளத்தின் இரு துருவங்களான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்தில் வர விடாமல் தடுக்கும் சக்தி பாஜகவுக்கு இருக்கிறது. இதற்கு சான்று கடந்த நாடாளுமன்றத் தேர்தல்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்கா விட்டாலும், போட்டியிட்ட தொகுதிகளில், கணிசமான வாக்குகளை பெற்றது பாஜக. அதன்படிதான் தற்போது 20 தொகுதி பிளானை கையிலெடுத்துள்ளோம். கேரளத்தில் ஆட்சியை பிடிக்க, 71 சட்டப்பேரவை தொகுதிகளில் வெல்ல வேண்டும். ஆனால் நாங்கள் உழைக்கும் 20 இடங்களை மட்டும் கைப்பற்றிவிட்டால் அது பெரும்பான்மை எண்ணிக்கையில் கண்டிப்பாக சிக்கலை ஏற்படுத்தும். அப்படி நாங்கள் ஜெயித்து, பெரும்பான்மைக்காகக் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் கைகோர்த்தால், இரு கட்சிகளுமே ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று அவர்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்வோம்.

அப்படி செய்தால் பாஜக முக்கிய எதிர்கட்சியாக மக்களின் மனதில் நிலைக்கும். இதை வைத்து 2026ல் ஆட்சியை பிடிக்க, அடித்தளம் அமைப்போம். ஆனால் நாங்கள் நினைப்பது போல் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்கள் இணையாவிட்டால், ஆளுநர் ஆட்சி வந்துவிடும். அப்போதும், காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டுகளும் ஆட்சிக்கு வர முடியாது" என்று பேசியுள்ளனர் அம்மாநில பாஜக பிரமுகர்கள். ஆனால் அவர்கள் நினைப்பது நடக்குமா.. வெயிட் அண்ட் வாட்ச்.

READ MORE ABOUT :

More India News