8 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு.. பிரதமர் மோடி பேச்சு..

by எஸ். எம். கணபதி, Sep 14, 2020, 09:07 AM IST

பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் 3 பெட்ரோலியத் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பாரதீப்பில் இருந்து ஹால்டியா வழியாக துர்காபூர் இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை பெட்ரோலிய அமைச்சகம் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் துர்காபூர் - பங்கா பிரிவு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதைப் பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதே போல், கிழக்கு சம்பரான் மற்றும் பங்கா ஆகிய இடங்களில் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் அவர் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இலவச சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ், 8 கோடி குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகத் திட்டங்களால், பீகார் மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். அரசு செயல்படுத்தும் ரூ.900 கோடி பெட்ரோலியத் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பங்கா மற்றும் கிழக்கு சம்பரான் எரிவாயு மையங்களில், ஆண்டுக்கு 25 லட்சம் சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பப்படும், பீகார் மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட 10 பெட்ரோலியத் திட்டங்களில் 7 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோரும் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.பீகாரில் பகல்பூர், பங்கா, ஜமூய்(Jamui), அராரியா, கிஷான்கஞ்ச் மற்றும் கட்டிகர் மாவட்டங்களுக்கும், ஜார்கண்டில் கோடா, தியோகர், தும்கா, சாகிப்கஞ்ச், பாகுர் மாவட்டங்களுக்கும் பங்கா எரிவாயு நிரப்பும் மையத்தில் இருந்து, எரிவாயு சப்ளை செய்யப்பட உள்ளது.பீகாரில் கிழக்கு மேற்கு சம்பரான் மாவட்டங்கள், முசார்பர்நகர், கோபால்கஞ்ச், சீதாமார்கி மாவட்டங்களுக்கும், உத்தரப்பிரதேசத்தில் குஷிநகர் மாவட்டத்திற்கும், சம்பரான் மையத்திலிருந்து எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளது.பங்கா எரிவாயு நிரப்பும் மையம், 131 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சம்பரான் எரிவாயு நிரப்பும் மையம் 136 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 மையங்களின் மூலம், சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.

READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை