கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி இரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 62 நாட்கள் நீடித்த ஊரடங்கின் போது, லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரம் கி.மீ. தூரம் நடந்தே சென்று சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். அவர்களில் நூற்றுக்கணக்கானோர் உணவின்றியும், விபத்துகளிலும் சிக்கி இறந்தனர். அதே போல், மே 9ம் தேதி முதல் 27ம் தேதி வரை விடப்பட்ட ஷராமிக் சிறப்பு ரயில்களில் சென்ற தொழிலாளர்கள் 80 பேர் வரை உயிரிழந்ததாக ரயில்வே பாதுகாப்பு படையின் புள்ளி விவரம் தெரிவித்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? அவர்களின் குடும்பங்களுக்கு அரசு என்ன இழப்பீடுகளை அளித்தது? மாநிலவாரியாக புள்ளி விவரங்கள் வெளியிட முடியுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்கு மத்திய அரசின் தரப்பில், அது போன்ற புள்ளிவிவரங்கள் எதுவும் அரசிடம் இல்லை என்றும், உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு தரும் கேள்வியே எழவில்லை என்றும் பதிலளிக்கப்பட்டது.
மேலும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறுகையில், கோவிட் 19 பெருந்தொற்று பரவிய காலத்தில் மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள மற்றும் மருத்துவ, சுகாதார வல்லுநர்கள், சுய உதவிக் குழுவினர் என்று எல்லோரும் சிறப்பாக செயல்பட்டனர். ஊரடங்கின் போது மக்கள் பிரச்னைகளை தமிழ்நாடு உள்பட மாநிலங்கள் சிறப்பாக கையாண்டன என்று தெரிவித்தார்.
இதையும் பாருங்க: பிரசாந்த் கிஷோர் திமுகவிற்கு பலவீனமா ?