கொடுத்த வாக்குறுதியை அரசு காப்பாற்றாததால் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் குடும்பம் கீர்த்தி சக்ரா விருதை அரசிடம் திரும்ப ஒப்படைக்க தீர்மானித்துள்ளது.
இமாச்சல பிரதேச மாநிலம் கங்கரா மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமாரி. இவரது மகன் அனில் சவுகான் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 18 வருடங்களுக்கு முன் இவர் அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தார். அப்போது போடோ தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட மோதலில் அனில் சவுகான் வீரமரணம் அடைந்தார். பின்னர் இவரது உடல் சொந்த ஊரான கங்கராவில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இவரது வீர மரணத்திற்காக மத்திய அரசு கீர்த்தி சக்ரா விருதை வழங்கி கவுரவித்தது.
அப்போது அனில் சவுகானின் குடும்பத்திற்கு இமாச்சலப் பிரதேச அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அவர் பிறந்த ஊரான கங்கராவில் உள்ள அரசுப் பள்ளிக்கு அனில் சவுகானின் பெயர் வைக்கப்படும் என்றும், அவரது பெயரில் அந்த கிராமத்தில் நுழைவாயில் அமைக்கப்படும் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அரசு அளித்தது. ஆனால் கடந்த 18 வருடங்களாக எந்த வாக்குறுதியையும் இமாச்சலப் பிரதேச அரசு நிறைவேற்றவில்லை.
இதனால் வெறுப்படைந்த அனில் சவுகானின் தாய் ராஜ்குமாரி தனது மகனுக்கு கிடைத்த கீர்த்தி சக்ரா விருதை அரசிடமே திரும்ப ஒப்படைக்க தீர்மானித்துள்ளார். விரைவில் இமாச்சல பிரதேச கவர்னரை சந்தித்து விருதை திரும்ப ஒப்படைக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அறிந்த இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், அனில் சவுகானின் குடும்பத்திற்கு அளித்த வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை - மகனுக்காக அரசு தந்த விருந்தை ஒப்படைக்க முடிவு செய்த தாய்...!
Advertisement