ராஜ்யசபா புறக்கணிப்பு.. மத்திய அரசுக்கு நெருக்கடி.. எதிர்க்கட்சிகள் போராட்டம்..

by எஸ். எம். கணபதி, Sep 22, 2020, 16:10 PM IST

எட்டு எம்.பி.க்களின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யும் வரை மாநிலங்களவையைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து, சஸ்பெண்ட் எம்.பி.க்கள் போராட்டத்தை கைவிட்டனர்.மாநிலங்களவையில் நேற்று முன் தினம்(செப்.20) வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, மசோதாக்களில் திருத்தங்களைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். தேர்வுக் குழுவுக்கு அனுப்பவும் வலியுறுத்தின. அதை அரசு தரப்பில் ஏற்கவில்லை.

இதையடுத்து, மசோதாக்கள் மீது டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். அதை நிராகரித்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவை தலைவர் இருக்கை அருகே சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மைக்கைப் பிடித்து இழுத்து உடைக்க முயற்சித்தனர். விதி புத்தகங்களைக் கிழித்து வீசியெறிந்தனர். இதைத் தொடர்ந்து, திரிணாமுல் கட்சியின் டெரிக் ஓ பிரையன், டோலா சென், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதவ், சையத்நாசர் ஹுசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கட்சியின் கே.கே.ராஜேஷ், எலமரம் கரீம், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங் ஆகிய 8 பேரும் அவை விதிகளை மீறி விட்டதாகக் கூறி, அவர்களை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று அறிவித்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் நேற்றிரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தி, அங்கேயே தூங்கினர். விடிய விடிய நடந்த இந்த போராட்டத்திற்குப் பின்னர், இன்று காலையில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அங்குச் சென்று அந்த எம்.பி.க்களுக்கு காபி கொடுத்துப் பேசினார். இதனால், அந்த எம்.பி.க்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு ராஜ்யசபாவில் அமைதி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எம்.பி.க்கள் மன்னிப்பு கேட்டால் மட்டுமே சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். இந்நிலையில், மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், அந்த 8 எம்பிக்களின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யக் கோரினார். அதை மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு ஏற்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து ஆம்ஆத்மி, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின், குலாம் நபி ஆசாத் கூறுகையில், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் வரை மாநிலங்களவையை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும். அதேசமயம், சஸ்பெண்ட் ஆன எம்.பி.க்களை துணை தலைவர் ஹரிவன்ஷ் சந்தித்து டீ கொடுத்ததைப் பாராட்டுகிறேன் என்றார்.எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து சஸ்பெண்ட் ஆன எம்பிக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இந்நிலையில், பகுஜன்சமாஜ் கட்சியும், பிஜூஜனதா தளம் கட்சியும் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பில் பங்கேற்காமல், மாநிலங்களவை விவாதத்தில் கலந்து கொண்டன.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.com


READ MORE ABOUT :

More India News

அதிகம் படித்தவை