நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பின்பு, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது, எதிர்க்கட்சிகள் டிவிசன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. அதைத் துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நிராகரித்து, குரல் வாக்கெடுப்பு நடத்தினார். இதையடுத்து, காங்கிரஸ், திரிணாமுல், திமுக, ஆம் ஆத்மி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள், அவை தலைவர் இருக்கைக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். விதி புத்தகங்களைக் கிழித்து வீசினர். மைக்கை உடைக்கும் முயற்சியும் நடந்தது.
இதையடுத்து, திரிணாமுல் கட்சியின் மூத்த உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் உள்பட 8 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த 8 உறுப்பினர்களை மீண்டும் அனுமதிக்கும் வரை மாநிலங்களவையைப் புறக்கணிப்பதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் நேற்று வெளிநடப்பு செய்தன. இதன் பின்பு, 7 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதாவுடன், இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா, வங்கிகளை முறைப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா, கம்பெனிகள் சட்டத் திருத்த மசோதா, தேசிய தடயவியல் பல்கலைக்கழகச் சட்டத் திருத்த மசோதா, ராஷ்ட்ரீய ரக்ஷா பல்கலைக்கழக சட்ட மசோதா மற்றும் வரிவிதிப்பு சட்டத் திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, சிவசேனா, ராஷ்ட்ரீய ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி, ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததுடன், இந்த தொடர் முழுவதும் புறக்கணிக்கப் போவதாகவும் கூறியுள்ளன. அதே சமயம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 உறுப்பினர்களும் மன்னிப்பு கேட்டால் மட்டுமே சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஜேபி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள், மசோதாக்களின் மீதான விவாதத்தில் பங்கேற்றனர்.இதே போல், மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி, வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் அலுவலக மொழிகள் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீரி, டோக்ரி, இந்தி, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகள், அந்த மாநிலத்தின் அலுவலக மொழிகளாகச் சட்ட மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 தொழிலாளர் நலச் சட்ட மசோதாக்களும் அதிக விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிபந்தனைகள் சட்ட மசோதா, தொழில்துறை உறவுகள் சட்ட மசோதா மற்றும் சமூகப் பாதுகாப்பு சட்ட மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.இந்த மசோதாக்கள், தொழிலாளர்களின் நலனில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பைத் தொடர்ந்து, மக்களவையில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மேலும் பல சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.