ராஜ்யசபா துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம்.. இன்று காலை முடிந்தது..

Rajya Sabha Deputy Chairman Harivansh breaks his one-day fast.

by எஸ். எம். கணபதி, Sep 23, 2020, 09:52 AM IST

எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார்.மாநிலங்களவையில் கடந்த செப்.20ம் தேதியன்று வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, மசோதாக்களில் திருத்தங்களைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். தேர்வுக் குழுவுக்கு அனுப்பவும் வலியுறுத்தின. அதை அரசு தரப்பில் ஏற்கவில்லை.

இதையடுத்து, மசோதாக்கள் மீது டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரினர். அதை நிராகரித்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், குரல் வாக்கெடுப்பு நடத்தி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவை தலைவர் இருக்கை அருகே சென்று கடும் அமளியில் ஈடுபட்டனர். மைக்கைப் பிடித்து இழுத்து உடைக்க முயற்சித்தனர். விதி புத்தகங்களைக் கிழித்து வீசியெறிந்தனர்.

இதைத் தொடர்ந்து, திரிணாமுல் கட்சியின் டெரிக் ஓ பிரையன், டோலா சென், காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் சதவ், சையத்நாசர் ஹுசைன், ரிபுன் போரா, மார்க்சிஸ்ட் கட்சியின் கே.கே.ராஜேஷ், எலமரம் கரீம், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங் ஆகிய 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே போராட்டம் நடத்தினர். அவரை துணை தலைவர் ஹரிவன்ஷ் சென்று சந்தித்து டீ கொடுத்தார். உடனே, அவரை பிரதமர் மோடி பாராட்டினார்.
இந்நிலையில், துணைத் தலைவர் ஹரிவன்ஷ் விதிகளை மீறி விட்டார் என்று கூறி, 12 முக்கிய எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்தனர். ஆனால், இவற்றை ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

இதற்கிடையே, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவை உறுப்பினர்கள் தன்னை அவமதித்து விட்டதாகக் கூறி, ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். இன்று(செப்.23) காலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அவருக்கு எம்.பி.க்கள் பழரசம் கொடுத்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர்.நாடாளுமன்றத்தில் வேளாண் மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்தியதில் ஜனநாயக மாண்புகள் மீறப்பட்டதை மறைக்கவே மத்திய பாஜக அரசு பல நாடகங்களை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

You'r reading ராஜ்யசபா துணை தலைவர் ஒரு நாள் உண்ணாவிரதம்.. இன்று காலை முடிந்தது.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை