அண்டை நாடுகளுடன் காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஏற்படுத்தி வைத்திருந்த நல்லுறவுகளை மோடி அழித்து விட்டார் என்று ராகுல்காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தினமும் டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர் இன்று(செப்.23) வெளியிட்ட பதிவில், தி எகனாமிஸ்ட் பத்திரிகையில் வங்கதேசத்துடன் இந்தியாவின் உறவு வலுவிழந்து வருவதாக வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் அவர், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பல ஆண்டுகளாக அண்டை நாடுகளுடன் ஏற்படுத்தி வைத்திருந்த நல்லுறவைப் பிரதமர் மோடி அழித்து விட்டார். அண்டை நாடுகளில் நல்லுறவே இல்லாவிட்டால், அது நமக்குத்தான் மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.ஏற்கனவே மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்தும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், எல்லாம் அறிந்த மத்திய அரசின் முடிவற்ற ஆணவம், முழு நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது எனக் கூறியிருந்தார்.