பிச்சை எடுப்பதற்காக ரயில்வே ஸ்டேஷனில் வைத்து லதா மங்கேஷ்கரின் பாடலை அச்சுப்பிசகாமல் அதே ராகத்தில் பாடி பிரசித்தி பெற்ற பின்னர் சினிமாவில் நுழைந்த ரானு மண்டல் இப்போது அதே பழைய நிலைக்குச் சென்று விட்டார்.கடந்த வருடம் மேற்குவங்க மாநிலம் ரனாகட் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து இந்தியாவின் வானம்பாடியான லதா மங்கேஷ்கரின், 'ஏக் பியார் கா நக்மா ஹே' என்ற பாடலை ஸ்துதி மாறாமல் அதே ராகத்தில் பாடி ரானு மண்டல் என்ற மூதாட்டி இந்தியா முழுவதும் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
ரயில்வே ஸ்டேஷனில் பிச்சை எடுப்பதற்காகப் பாட்டு பாடி வரும் அந்தப் பெண்ணின் இனிமையான குரலை அந்த வழியாகச் சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார். அந்த மூதாட்டியின் இனிமையான குரலைக் கேட்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். நிமிட நேரத்தில் அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.அந்தப் பாடலை கேட்டு லதா மங்கேஷ்கர் உட்படப் பல பிரமுகர்களும் ரானு மண்டலுக்கு பாராட்டு தெரிவித்தனர். அந்த பாட்டை கேட்டு மயங்கிய பிரபல இந்தி இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மியா அவரை மும்பைக்கு வரவழைத்து தனது படங்களில் பாட்டுப் பாட வாய்ப்பு கொடுத்தார். அவரது இசையில் ரானு மண்டல் 3 பாடல்களை பாடினார். இதன் பிறகு இவர் புகழின் உச்சிக்குச் சென்றார். இந்தியா முழுவதும் பல டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டார்.
மிக குறுகிய காலத்திலேயே பெயரும், புகழும் தேடி வந்ததைத் தொடர்ந்து இவர் தனது குடிசை வீட்டிலிருந்து இடம்பெயர்ந்து வேறு வீட்டுக்குச் சென்றார். இவரை விட்டு விட்டுச் சென்ற பிள்ளைகளும் அவரை தேடி வந்தனர். இதற்கிடையே சில சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார். ஒரு பொது இடத்தில் வைத்து அவருடன் போட்டோ எடுக்க முயன்ற ஒரு இளம்பெண்ணைக் கோபத்துடன் ரானு மண்டல் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவரது அதிரடி மேக் ஓவரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒரே பாட்டில் பிரபலமான ரானு மண்டல் குறித்து பின்னர் அதிகமாக யாருக்கும் தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக அவர் எங்கு போனார் என்பது மர்மமாக இருந்தது. இந்நிலையில் அவர் மீண்டும் அதே பழைய வீட்டிற்கே சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. வாழ்வதற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீண்டும் அவர் பழைய நிலைக்கே சென்று விட்டதாக ஒரு தேசிய பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.