பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் சில தினங்களுக்கு முன் வெளியானது . இதில் முன்னாள் மத்திய அமைச்சரும் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான உமா பாரதியின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து அவர் கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எனக்கு தண்டனை கிடைக்கக்கூடும் என்ற காரணத்தினால் புதிய நிர்வாகிகள் பட்டியலில் எனது பெயர் இடம்பெறவில்லை என்று நான் கருதுகிறேன். அது உங்கள் முடிவாகும். நான் கட்சியிலிருந்தபொழுதும், கட்சி நிர்வாகப் பொறுப்பில் இல்லாத பொழுதும், ராமர் ஆலயம் அமைக்க வேண்டும் என்பதற்கான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டேன்.
பிற்பட்ட வகுப்பினர் மத்தியில் ராமர் ஆலயத்துக்கு நான் ஆற்றிய பணி அனைவருக்கும் தெரியும்.
ராமர் ஆலயம் அமைப்பது ராம ராஜ்ஜியத்தை இந்தியாவில் உருவாக்குவதும் நமது கட்சியின் லட்சியம் ஆகும். ராமர் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இந்தியாவில் ராம ராஜ்ஜியத்தை உருவாக்கும் பணியில் என் மீதமுள்ள வாழ்நாளைப் பயன்படுத்துவேன். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எனக்குச் சிறைத் தண்டனை விதித்தால் நான் ஜாமீனில் விடுதலையாகமாட்டேன் அதற்குப் பதிலாகத் தூக்கில் தொங்குவதாக இருந்தாலும் அது எனக்குச் சம்மதம்தான் என்று பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில் உமாபாரதி கூறியுள்ளார்.