தற்போது கொரோனா காலம் என்பதால் கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ஜலந்தர் பிஷப்பின் கோரிக்கையைக் கேரள உயர்நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்தது. கோட்டயம் அருகே உள்ள குரவிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, தன்னை ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்ததாகப் போலீசில் புகார் கூறியது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2014 முதல் 2016 வரை பலமுறை பிஷப் இல்லத்தில் வைத்தும், கன்னியாஸ்திரி ஆசிரமத்தில் வைத்தும் பிஷப் பிராங்கோ மிரட்டி பலாத்காரம் செய்ததாக அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.ஆனால் போலீசார் பிஷப் மீது முதலில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதையடுத்து பிஷப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கேரளா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பல மாதங்களுக்குப் பின்னர் பிஷப் பிராங்கோ மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு மாத சிறைவாசத்துக்குப் பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை கோட்டயம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தற்போது கொரோனா காலம் என்பதால் விசாரணையை 2 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறி பிஷப் பிராங்கோ கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸ் தரப்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், விசாரணையை நிறுத்தி வைப்பது சாட்சிகளுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே சாட்சிகளுக்கு மிரட்டல் வந்து கொண்டிருப்பதால் அவர்களைப் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டி உள்ளது. எனவே விசாரணையை நிறுத்தி வைக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிஷப் பிராங்கோவின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தது.